1924 ஆம் காலப்பகுதியில் வாழ்ந்த கண்ணியமிக்க ஆலிம்களால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்பத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருந்தோர் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.
எட்டு தசாப்தங்களைக் கடந்து இன்று பன்முகப்படுத்தப்பட்ட சமூக சேவையில் தன்னலம் பாராது உழைத்து வரும் ஜம்இய்யா வரலாறு நெடுகிலும் மனித சமூகத்திற்குப் பொதுவாகவும், நம் நாட்டு முஸ்லிம்களுக்குக் குறிப்பாகவும் எவ்வித அரசியல் சாயங்களையும் பூசிக் கொள்ளாமல் காலத்தின் தேவைகளைக் கவனத்திற்கொண்டு பலவிதமான சேவைகளைப் புரிந்து வந்துள்ளது.
2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்ட எமது ஜம்இய்யாவிற்கு நாடளாவிய ரீதியில் மாவட்ட, பிரதேசக்கிளைகள் என 117 கிளைகள் உள்ளன. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் தற்போது அதில் அங்கம் வகிக்கின்றனர்.
மூன்று வருடத்திற்கொரு முறை பொதுத் தெரிவு நடைபெற்று வருகின்றது. அத்தெரிவில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும், அமைப்புக்களையும் சேர்ந்த 33 ஆலிம்கள் நிர்வாகக் குழுவிற்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.
ஜம்இய்யாவின் இவ் உயர்மட்டக் குழுவின் மேற்பார்வையின் கீழ் பத்வாக்குழு, ஹிலால் குழு, சமூக சேவைக் குழு, கல்விக் குழு, ஆய்வு மற்றும் வெளியீட்டுக்கான குழு, பிரசாரக் குழு, நிதி நிறுவனங்களுக்கான மதியுரைக் குழு, தகவற் குழு, ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான குழு, கிளைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு, மகளிர் விவகாரக் குழு, இளைஞர் விவகாரக் குழு, அலிம்களின் நலன்புரிக் குழு போன்ற குழுக்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூறப்பட்ட ஒவ்வொரு குழுக்களிலும் ஜம்இய்யாவின் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் 33 ஆலிம்களுடன் நாட்டின் துறைசார்ந்த உலமாக்களும் இணைந்து அங்கம் வகிக்;கின்றனர்.
No comments:
Post a Comment